சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.
Double Decker Buses Back In Chennai: இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையிலும் 1997-ல் டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லவன் போக்குவரத்து கழகத்தின் (தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகம்) சார்பில் இந்தப் பஸ்கள் திருவல்லிக்கேணி முதல் பெசன்ட் நகர் வரையிலும், பிராட்வே முதல் அடையார் வரையிலும் இயக்கப்பட்டன. சில தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் லாபம் இல்லாததால் 2008ம் ஆண்டு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்
இந்த நிலையில் சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொண்டு வர மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 20 மின்சார பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டபுள் டெக்கர் பேருந்துகளை அதற்கேற்ற சிறப்பு வழித்தடங்களில் மட்டுமே இயக்க முடியும். ஆகவே இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ள வழித்தடங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆய்வு செய்து வருகிறது. வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் சென்னையில் டபுள் டெக்கர் பஸ் ஓடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
எந்தெந்த வழித்தடத்தில் இயக்கம்?
புதிய டபுள் டெக்கர் பஸ்கள் கடற்கரைச் சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளை இந்த பஸ்கள் இணைக்கும் என கூறப்படுகிறது. முற்றிலுமாக குளிர்சாதன வசதியுடன் இயக்கப்போகும் டபுள் டெக்கர் பஸ்களில் சிசிடிவி கேமராக்கள், எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் சிஸ்டம் மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள் போன்ற வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்
நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்கெனவே திருவனந்தபுரத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது எர்ணாகுளத்திலும் டபுள் டெக்கர் பஸ்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையிலும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்கினால் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும். ஆனால் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
டபுள் டெக்கர் பஸ்களை இயக்குவதில் உள்ள சவால்கள்
சென்னையில் பல மேம்பாலங்கள் மற்றும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உள்ளன. இந்த பாலங்களின் உயரம் டபுள் டெக்கர் பஸ்களின் உயரத்தை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே இந்தப் பஸ்கள் செல்லும் வழித்தடங்களை மிக கவனமாகத் திட்டமிட வேண்டியது அவசியமாகும். மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பழுதுபார்க்கும் வேலைகள், குறுகிய சாலைகள் ஆகியவை டபுள் டெக்கர் பஸ்களை இயக்குவதில் பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
