கோயில் கட்டிடங்களில் வீடியோ கேம்ஸ், மனமகிழ் மன்றம் நடத்தக்கூடாது என்றும், அசைவ உணவு, போதை வஸ்து பொருட்கள் விற்கக்கூடாது என்றுஅ றநிலையத்துறை நிபந்தனை விதித்துள்ளது. இதை தவிர்த்து 3 மாதம் வாடகை தராவிட்டால் வாடகைதாரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் 38,652 கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 22,600 கட்டிடங்களும், 33,655 மனைகளும் உள்ளது. இந்த கட்டிடங்கள் மற்றும் நிலங்கள் வாடகை மற்றும் குத்தகை எடுத்தவர்கள் பல மாதங்களாக அதற்கான பணத்தை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து வாடகை பாக்கி வைத்திருப்போர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்த வீடு மற்றும் கடைகளை தற்போது பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடும் பணியில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. அவ்வாறு பொது ஏலம் எடுப்பவர்களுக்கு அறநிலையத்துறை பல்வேறு நிபந்தனை விதித்துள்ளது.

அதன்படி 3 மாதங்கள் வாடகை செலுத்தாவிடில் வாடகை ஒப்பந்தம் தானாகவே ரத்து செய்யப்பட்டு வாடகைதாரர் வெளியேற்றப்படுவர். நியாயவிலை வாடகை ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்குள் கோயில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தாமதமாக செலுத்தினால் 10 சதவீதம் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.

கோயில் நிர்வாகத்தின் எழுத்து மூலமாக அனுமதியின்றி கட்டிடத்தை பழுதுபார்க்கவோ, புதுப்பிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ கூடாது. மராமத்து, வெள்ளையடிப்பு போன்ற வேலைகளை எழுத்து மூலமாகவோ அனுமதி பெற்று தனது சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்.

திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுபானங்கள், லாகிரி வஸ்துகள், வீடியோ கேம்ஸ், மனமகிழ் மன்றம் மற்றும் அசைவ உணவு போன்ற கோயில் நலனுக்கும் இந்து சமய கொள்கைகளுக்கும் விரோதமானவற்றை வியாபாரம் செய்யக்கூடாது.

பொது ஏலம் முடிவுற்ற பிறகு ஏலதாரர் தெரிவிக்கும் எந்த ஆட்சேபனையும் கோயில் நிர்வாகம் ஏற்காது. ஏலம்/டெண்டர் உறுதி செய்யப்பட்ட பின் டெண்டர் எடுத்தவர்களின் சூழ்நிலை காரணமாக ரத்து செய்து வைப்புத்தொகையை திரும்பக்கேட்டால் வைப்பு தொகை 20 சதவீதம் தொகை கழித்து கொண்டு மீதமுள்ள வைப்பு தொகை வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையை பின்பற்றாத வாடகைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.