தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. இதை அதிமுக தட்டிக்கேட்க முடியாமல், முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு திமுக எதிர்த்து தெரிவித்துவருகிறது. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்களையும் திமுக முன்னெடுத்துவருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தனது சமூக ஊடகப் பக்கங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு, அதில் குடியுரிமைச் சட்டம் தொடர்பாகப் பேசியுள்ளார். 


 “குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றியுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இது மக்கள் விரோத, மக்களைப் பேதப்படுத்தி, பிளவுபடுத்தும் பிற்போக்கான சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திமுக எதிர்த்து வாக்களித்தது. ஆனால், அதிமுக ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. அதைச் சட்டமாக்க பாஜக அரசுக்கு அதிமுக பெரிதும் உதவியிருக்கிறது. இந்தச் சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடந்துவருகின்றன.
தமிழகத்தில் திமுகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல பிரச்னைகள் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த ஏமாற்றத்தையும், குமுறலையும் திசைதிருப்ப இந்தச் சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதில், அகதிகளாக வரும் அனைவருக்குமே குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லியிருந்தால், யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால்,  இஸ்லாமிய மக்களை மட்டும் புறக்கணிக்கிற வகையில் ஓரவஞ்சனையான, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக அதை பாஜக மாற்றி உள்ளது. அதற்கு அதிமுக பக்கபலமாக இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்.
இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் ஏன் வெறுத்து புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் தவிர பிற மதத்தவரெல்லாம் வரலாம் என்கிறார்கள். அப்படியென்றால்  இலங்கைக்கு மட்டும் ஏன் தடை? இதுதான், ஈழத்தமிழர்களுக்கு பாஜக, அதிமுக இழைக்கிற மாபெரும் துரோகம். அதனால்தான் தமிழர்கள் அனைவரும் இந்தச்சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம்.
தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. இதை அதிமுக தட்டிக்கேட்க முடியாமல், முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுக்கு தமிழர்கள் அப்படி என்ன துரோகம் செய்தார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்கிறார்கள். அப்படியென்றால் இலங்கை அண்டை நாடு இல்லையா? முஸ்லிம்களால்  துன்புறுத்தப்படுகிற மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றால், பவுத்த சிங்களவர்களால் தமிழர்கள்  கொல்லப்படுவது பற்றி ஏன் பாஜக அரசு கவலைப்படவில்லை?
ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றாலும், அவர்களுடைய சமய நம்பிக்கை இந்து மற்றும் சைவம்தானே! அவர்களைப் புறக்கணித்தால், இந்துத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று நினைப்பதாகத்தானே அர்த்தம்? இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர்ப்பலியே ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரவே தயங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு இந்தச் சட்டம் உட்பட்டதா என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையமே வலியுறுத்தி இருக்கிறது. ஆனால், யார் சொன்னால் என்ன, நாங்கள் கேட்க மாட்டோம் என்கிற தொனியில்  மக்கள் விரோத, மதச்சார்பின்மையை குழிதோண்டிப் புதைக்கிற இந்தச் சட்டத்தை பிடிவாதமாக அமல்படுத்தி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதை அடிபிசகாமல் அடிபணிந்து ஆதரித்திருக்கிறது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு. ஆனால், தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிராக கொதித்தெழும் திமுக, இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.
தமிழினத்தின் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் தெம்பும், திராணியும் திமுகவுக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன்தான்  தமிழினத்தின் உரிமையைக் காக்க இப்போதும் போராட்டக் களம் காணத்தயாராகி விட்டது திமுக. எப்போதும் இனத்துக்கான நமது போராட்டம் தொடரும்.” என்று மு.க. ஸ்டாலின் காணொளியில் தெரிவித்துள்ளார்.