வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. இதையொட்டி, ரயிலுக்கான ரிசர்வேஷன் இன்று முதல் தொடங்கிவிட்டது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு முக்கிய பண்டிகைகளில் ஒன்றான, தீபாவளி பண்டிகை, வரும் அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதற்காக, சென்னையில் இருந்து வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று கொண்டாடுவார்கள். இதையொட்டி, தீபாவளிக்கு பஸ் மற்றும் ரயில்களில் டிக்கெட் ரிசர்வ் செய்வார்கள்.

 

பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் ரயில்கள், பஸ்களை இயக்க அரசு ஏற்பாடு செய்யும். ஆனாலும், டிக்கெட் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமம் அடைவதை பல்வேறு செய்தி தாள்களிலும், டிவி சேனல்களிலும் பார்ப்போம்.

இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் ரயில்வே நிர்வாகம் முன்பதிவை தொடங்கியுள்ளது. இன்று காலை தொடங்கிய உடனே நாகர்கோவில், நெல்லை ,மதுரை உள்பட பல்வேறு தென்மாவட்ட ரயில்களும், வெளி மாநில ரயில்களுக்கும் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன.

முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன்பதிவு செய்ய இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.