ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குண்டுபெரும்பேடு ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி நிலத்தடிநீரை, குடிக்க பயன்படுத்த முடியாது. இதனால் மாகாண்யம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் மூலம் குண்டுபெரும்பேடு கிராமத்துக்கு குடிநீர் வழங்கபடுகிறது.

ஆண்டுதோறும், கோடைக்காலத்தில் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துவிடும். அதே நேரத்தில், குண்டுபெரும்பேடு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன. இதனை தூர்வாரி, சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து குண்டுபெரும்பேடு கிராம மக்கள் கூறியதாவது, குண்டுபெரும்பேடு கிராமத்தில் நல்லதம்பி குளம், புதுக்குளம், செல்லகுட்டை, மேட்டுக்குட்டை உள்பட 20க்கும் மேற்பட்ட குளம் மற்றும் குட்டைகள் உள்ளன. இந்த குளங்களை சீரமைத்து மழைநீரை தேக்கி வைத்தால், மக்களின் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தலாம்.

ஆண்டுக்கு ஒரு குளத்தை சீரமைத்தாலும், தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க முடியும் என ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

எனவே குண்டுபெரும்பேடு கிராமத்தில் பாழாகி வரும் குளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.