சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 192வது வார்டுக்கு உட்பட்ட நீலாங்கரை கஜரா கார்டன் பகுதி அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி சுமார் 40 சென்ட் பரப்பில் எல்லை குட்டை என்கிற குளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி கடந்த 40 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, குளத்தை மீட்டு, பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 13 வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த 2 நாட்களுக்கு முன், மேற்கண்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று சோழிங்கநல்லூர் தாசில்தார் பிரபாகரன், வருவாய் அலுவலர் ஐயப்பன், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், நீலாங்கரை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு வந்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் கடைகளை இடிக்க முயன்றனர்.

அப்போது, அங்கு திரண்ட ஆக்கிரமிப்பாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசம் கேட்டனர். அதன்பேரில் அதிகாரிகள், சில வீடுகளின் மதில் சுவற்றை மட்டும் இடித்துவிட்டு, அங்கிருந்து திரும்பி சென்றனர்.