தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22-ல் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர்.

இதையடுத்து 2018 மே 28 அன்று அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதைஎதிர்த்தும் ஆலையை திறக்கக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா உள்ளிட்ட பல்வேறு தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டது. 

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நியைில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்றும் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.