அம்பத்தூர் அத்திப்பட்டு கலைவாணர் நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் (25). அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.

இவருக்கும், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சட்ட கல்லூரி 2ம் ஆண்டு மாணவி சத்யபிரியா என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சத்யபிரியா வீட்டில் இருந்து வெளியேறி லாரன்ஸ் வீட்டுக்கு வந்தார். லாரன்சின் பெற்றோர் 3 மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் இருவரும் ஆவடி, சரஸ்வதி நகர், சம்பங்கி தெருவில் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

3 மாதம் முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்குமாறு லாரன்சின் பெற்றோரிடம் சத்யபிரியா கேட்டுள்ளார். அப்போது அவர்கள், ‘‘உங்கள் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து சத்யபிரியா அளித்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரன்சை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸ் ஜாமீனில் வந்தார்.

இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள கடையில் நேற்று முன்தினம் லாரன்ஸ் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது சத்யபிரியா வந்து லாரன்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இதையடுத்து அம்பத்தூர் போலீசில் லாரன்ஸ் புகாரளித்தார். இதற்கிடையில் தந்தை சக்திவேல் (46) என்பவரிடம் சத்யபிரியா பிரச்னையை கூறியிருக்கிறார்.

இதையடுத்து சக்திவேல் தனது நண்பர் குமார் என்பவருடன் லாரன்ஸ் கடைக்கு வந்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லாரன்சின் தலையில் வெட்டினார். இதை தடுத்தபோது லாரன்ஸ் கையில் காயம் ஏற்பட்டது. உடனே சக்திவேல் தனது நண்பருடன் தப்பி ஓடினார்.

பின்னர் படுகாயம் அடைந்த லாரன்சை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின்பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சக்திவேலை நேற்று கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு சம்பந்தமாக சத்யபிரியா, குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.