நெல்லையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போல மயிலாப்பூரில் பாப்புலரான ஜன்னல் பஜ்ஜிகடை உரிமையாளர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மயிலாப்பூரின் பிரசித்தி பெற்ற கபாலீசுவரர் கோயில் அருகே, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜன்னல் பஜ்ஜி கடை. மொத்தமே ஒரு ஜன்னல் மட்டும்தான். உட்கார பெஞ்சு, சாப்பிட மேசை, பரிமாற ஆள் எதுவும் கிடையாது. ஆனால், பரபரபான வியாபாரம், காலையும் மாலையும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த கடை பொன்னம்பல வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் ரமேஷ் என்ற சிவராமகிருஷ்ணன ஆவார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் ரமேசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் அவரை கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் உயிரிழந்தார். இதனால், மயிலாப்பூர் மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர். ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டதால் பிரபல நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.