மதுராந்தகம் அருகே, வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவன், மனைவியை கத்தியால் வெட்டி, அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மதுராந்தகம் அருகே நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை சரண்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (38). அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெகதா. இவர்களுடன் சீனிவாசனின் தந்தை கண்ணன் (65) தங்கியுள்ளார்.

இரவு சீனிவாசன், வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்கினர். நள்ளிரவில் மர்மநபர்கள் 4 பேர், சீனிவாசன் வீட்டுக்குள் திடீரென நுழைந்தனர்.

சத்தம் கேட்டு, ஜெகதா எழுந்தார். உடனே மர்மநபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, ஜெகதா அணிந்திருந்த நகைகளை கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் கொடுக்க மறுத்து கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சீனிவாசன், அவரது தந்தை கண்ணன் ஆகியோர் எழுந்து, மர்மநபர்களிடம் போராடினர்.

இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், சீனிவாசனை கத்தியால் குத்தினர். இதை தடுக்க முயன்ற ஜெகதா, கண்ணனுக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதில், 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர், ஜெகதா அணிந்திருந்த 7 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ₹7000, 2 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

இதற்கிடையில், சீனிவாசன் குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை கண்டதும், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் வீடு புகுந்து வியாபாரி உள்பட 3 பேரை வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுராந்தகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.