தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 3,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,11,110ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,459 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,57,851ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 80,535 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.  இதுவரை 2 கோடியே ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 636 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,391 பேர் ஆண்கள், 1,595 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,49,952 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,61,122 ஆகவும், 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 1,824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,70,546 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 9 பேர் தனியார் மருத்துவமனையிலும் 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,821ஆக அதிகரித்துள்ளது. தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.