தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார். 

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவை தவிர இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,380 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கேரள மாநிலத்தில் சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த கொரோனா வைரஸ் இருந்ததையடுத்து அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது இந்த நோய் அறிகுறியுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  

இந்த கொரோனா வைரஸ் தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்;- தமிழகத்திலுள்ள சுகாதாரத்துறை சார்பில் கூட முதலில் யாரும் பயப்படாதீங்க. காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தொண்டைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பாவது உங்களுக்கு இருந்தால் முதலில் நீங்க அருகாமையில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகுங்கள். ஒரு நாளைக்கு 10-லிருந்து 15 முறை கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுங்கள்.

இந்த வைரஸ்ஸை பொருத்தவரை இது காற்றின் மூலமாக பரவக்கூடியது.அதேபோல தொடுதல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. மேலும், இந்தியாவிலேயே புனேவிற்கு அடுத்தபடியாக சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனாவை கண்டறியும் கருவிய கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பு தர வேண்டும் தேவையற்ற வதந்திகளை பரப்பக்கூடாது. சீனாவில் இருந்து வருபவர்களை வீட்டிலேயே வைத்து மருத்துவர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறிவந்த அரசு தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் அவசர அவசரமாக வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கியுள்ளது பொதுமக்களை பீதி அடைய செய்துள்ளது.