தமிழகத்தில் 2 பேருக்கு உறுதியாகியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் முழுவதும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதுவரை 3000-த்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தசூழலில் தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், கொரோனா வைரஸ் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதில் அடிக்கடி கை கழுவுதல், கை குட்டையை பயன்படுத்துதல், முழுமையாக மூடும் உடை அணிதல், பொது இடத்தில் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதாரத்துறை அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.