சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும்  27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கிவரக்கூடிய தனியார் மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய பெண்ணுக்கு நேற்றைய தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரது மூலமாக இந்த பெண் மருத்துவருக்கும் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருவரும் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இவரது வீடு அமைந்துள்ள அமைந்தகரை பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு இந்த குழு விரைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.