சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 12, 448  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 7,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கொரோனா நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 2 பெண்கள்  உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்,  ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி  மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த 44 வயது பெண் மற்றும் சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 52 வயது ஆண்,வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் உள்ளிட்ட 6 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது.