தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

டெல்லி நிஜாமுதீனில் கடந்த மார்ச் 8-தேதி முதல் 20- தேதி வரை மாநாடு ஒன்று நடைபெற்றது.  இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.

இதன்பின்பு அவர்களில் பலர் தங்கள் ஊருக்கு திரும்பி சென்றனர்.  இந்நிலையில், அவர்களில் 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்ததாகவும், மேலும் டெல்லியை சேர்ந்த 24 பேர் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. 

இந்த சூழலில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  அதில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே அவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள முன் வரவேண்டும் என்று தப்லிஹி ஜமாத் அமைப்பினரிடம் கேட்டு கொண்டுள்ளது. இந்த பரிசோதனையில்  110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்;- இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124லிருந்து 234ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றி. 

 

மேலும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,103 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் 6 பரிசோதனை மையங்கள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளன. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதுவரை 190 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. மேலும், அவரது குடும்பத்தினரையும் பரிசோதித்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.