தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டு நபருடன் தொடர்பில் இருந்தவர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது.

அதேபோல், தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. தேனியில் உயிரிழந்த பெண் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவரின் மனைவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 29 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 7,23,491 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த 485 பேரில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 422 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.