சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம், ஓமந்தூரார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகளவு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்னிலை பணியாளர்களான, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 52 வயதான செவிலியர் ஒருவர் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளார். சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செவிலியர், கடந்த 22 ஆண்டுகளாகத் தனது சேவையைச் செய்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் மார்ச் மாதத்தில் முதல் முறை தொற்று ஏற்பட்ட போது சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். மீண்டும் பணியில் சேர்ந்தவருக்கு 2வது முறையாக தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி உடல்நல சோர்வால், விடுமுறையில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.