சென்னையில் அரசு மருத்துவமனையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் பயந்து அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து, சுயநலமின்றி, பொதுநலத்துடன் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர். கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முழு பாதுகாப்பு உடை, மாஸ்க் ஆகியவைகள் வழங்கப்பட்டு, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. 

ஆனாலும் சில மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இதுவரையில் தமிழகத்தில் 3 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 செவிலியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்.எம்.சி.) உயர்பட்ட மேற்படிப்பு படிக்கக்கூடிய  மருத்துவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவ விடுதியில் தங்கியுள்ள அவர்களை பரிசோதித்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்தடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அரசுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.