சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டாலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகத்தில் 1821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சென்னையில் மட்டும் 495 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் மணிகண்ட நகரை சேர்ந்த 38 வயது தனியார் நிறுவன ஊழியர். மாணிக்க நகரைச் சேர்ந்த 38 வயது காய்கறி வியாபாரி என அடுத்தடுத்து இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், அந்தந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்ட காய்கறி வியாபாரியின் தாய், மனைவி, மகள், மகன் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 6 பேருக்கு தொடந்து சளி, இருமல் இருக்கவே சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் ஒரே நேரத்தில் தொற்று ஏற்பட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.