சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி(55) உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று 4,328 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 78,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,277 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக எஸ்.ஐ. குருமூர்த்தி (55) பணியாற்றி வந்தார். மதுராந்தகத்தை சேர்ந்த அவர் சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்தபோது கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 26ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,  எஸ்.ஐ. குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.