தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்  11,681 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 4வது நாளாக 3,750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,94,073ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 7,071 பேரையும் சேர்த்து,  இதுவரை  9,27,440 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்ததால், இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 13,258 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இப்படி தலைவிரித்தாடும் கொரோனா வைரஸின் ஆட்டத்தை தடுத்து  நிறுத்தும் விதமாக மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் கட்டாயமாக்கும் விதமாக அபராதம் வசூலிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு போராடி வரும் இதே தருணத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்த இக்காட்டான சூழ்நிலையில்,  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவுடன் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தொற்றைக் கட்டுப்படுத்த வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை கையாளலாம் என்பதும் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.