சென்னையில் உச்சத்தை அடைந்த கொரோனா..! 4 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு..!
மொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,524 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 7,128 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 98 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் எகிறும் வரும் பாதிப்பு தற்போது 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதனிடையே சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்புகளை தினமும் மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி மொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 1,300 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,079 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1000 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதே போல தண்டையார்பேட்டையில் 881 பேருக்கும், அண்ணா நகரில் 783 பேருக்கும், வளசரவாக்கத்தில் 650 பேருக்கும், அடையாறில் 513 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அம்பத்தூரில் 402 பேர், திருவொற்றியூரில் 250 பேர், மாதவரத்தில் 192 பேர், சோழிங்கநல்லூரில் 148 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பெருங்குடியில் 137 பேருக்கும், மணலியில் 115 பேருக்கும், ஆலந்தூரில் 100 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். தற்போது வரை அனைத்து மண்டலங்களிலும் 3,791 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 66 பேர் கொரோனா நோயால் மரணமடைந்துள்ளனர். நகரில் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.