சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி அரசு மருத்துவமனையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை  ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் மேலும் 57 வயதான ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை கொரோனா வார்டில், கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகிலிருந்த நோயாளிகள் மருத்துவமனை செக்யூரிட்டியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலின் அடிப்படையில் செக்யூரிட்டி கழிவறையின் கதவை உடைத்து பார்த்த போது கொரோனா நோயாளி, துண்டால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஒருவர் தற்கொலை கொண்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.