தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 4,526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,324ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழ்நாட்டில் இன்று 37,700 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், மேலும் 4,526 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1,42,798ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1,078 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 79,622ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.  

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், ஆறுதலான செய்தி என்னவென்றால் குணமடைவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று 4,743 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 97,310ஆக அதிகரித்துள்ளது. இன்று 67 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 2,099ஆக அதிகரித்துள்ளது.