சென்னையில் உள்ள கோல்டன் டெக்ஸ் துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் சென்னை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அண்மையில் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் திறக்கப்பட்டு பணிகள் செயல்பட்டு வந்தது. ஆனால், நிறுவனங்கள் முழுவதுமாக கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. 

ஊழியர்கள் குறைவான அளவிற்கு வைத்துக்கொள்ளுங்கள், அதேபோல், ஊழியர்களுக்கு  கொரோனா தடுப்பு பயிற்சிகளையும் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் பாதுகாப்பான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசு தரப்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள கோல்டன் டெக்ஸ் துணிக்கடையில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் 60 ஊழியர்களுக் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த துணிக்கடையில் 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரும் சூழலில் மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  இதனையடுத்து, அந்த துணிக்கடையை நகராட்சி அதிகாரிகள் மூடியுள்ளனர்.