தமிழ்நாட்டில் இன்று மேலும் 5994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமே, தொற்றுள்ளவர்களை அதிகமாக கண்டறிந்து விரைவில் கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 70,186 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5994 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே உறுதியாகிவரும் நிலையில் இன்றும் 989 இன்று பேருக்குத்தான் கொரோனா தொற்று உறுதியானது. எனவே சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,117ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துவருகிறது.

இன்று 6020 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,38,38ஆக அதிகரித்துள்ளது. இன்று 119 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 4927ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் பரிசோதனைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் பாதிப்பு குறைந்துவருகிறது. அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். எனவே தமிழ்நாடு கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.