தமிழ்நாட்டில் இன்று மேலும் 5875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,57,613ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டன. குழு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 65 ஆயிரம் பரிசோதனைகள் எனுமளவிற்கு சில நாட்கள் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், சுமார் 7 ஆயிரம் பாதிப்புகள் தினமும் உறுதியாகி கொண்டிருந்தன. 

ஆனால் கடந்த சில தினங்களாக 60 ஆயிரம் என்கிற அளவில் தான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுவரும் அதேவேளையில், பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன. குழு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அப்படி செய்திருந்தால் பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டுமே தவிர குறைந்திருக்காது. 

இன்று 60,344 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் 5875 பேருக்கு தொற்று உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,57,613ஆக அதிகரித்துள்ளது. 

இன்று சென்னையில் 1065 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,01,951ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,96,483ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 98 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4132ஆக அதிகரித்துள்ளது.