தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,245ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், இன்று 68,301 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5890 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,245ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே உறுதியான நிலையில், இன்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 1187 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,14,260ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துவருகிறது. 

தினமும் 300-400 என மதுரையில் பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில், மதுரையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தி பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த சில தினங்களாகவே மதுரையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்று புதிதாக வெறும் 46 பேருக்கு மட்டுமே மதுரை மாவட்டத்தில் கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை செய்யப்படும் போதிலும், பாதிப்பு குறைந்துள்ளதுடன் சேர்த்து, மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று 5556 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,67,015ஆக அதிகரித்துள்ளது.

53716 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று 117 பேர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 5514ஆக அதிகரித்துள்ளது.