கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 900ஐ கடந்துவிட்டது. 20 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கொரோனாவின் பாதிப்பும் தாக்கமும் தீவிரமாக உள்ளது. இரு மாநிலங்களுமே கொரோனா பாதிப்பில் 170ஐ கடந்துவிட்ட நிலையில், 200ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. 

கர்நாடகாவில் 74 பேரும் ராஜஸ்தானில் 56 பேரும் குஜராத்தில் 53 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 41ஆக இருந்த நிலையில், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.