தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுவருகிறது. நேற்றுவரை 485 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு மற்றும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அப்டேட் செய்துவரும் பீலா ராஜேஷ், இன்றும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிதாக 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த அவர், அவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை பரிசோதிக்க தொடங்கிய பின்னர்தான் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மளமளவென உயர்ந்துவருகிறது. கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தவுடனேயே சிகிச்சைக்கு வராமல், அதன் தாக்கம் தீவிரமடைந்த பின்னர் வருபவர்கள் தான் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 90 ஆயிரத்து 824 பேர் வீட்டுக்கண்காணிப்பிலும் 127 அரசு கண்காணிப்பிலும் இருப்பதாக தெரிவித்த அவர், இதுவரை தமிழ்நாட்டில் 8 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா சமூக தொற்றாக இன்னும் பரவவில்லை. தமிழ்நாடு கொரோனா தாக்கத்தில் இன்னும் இரண்டாவது கட்டத்தில் தான் இருப்பதாக தெரிவித்தார். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க, தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.