இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. மகாராஷ்டிராவில் 1297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை தமிழ்நாட்டில் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே இருந்தாலும், இன்னும் சமூக தொற்றாக மாறாததால் தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது. ஆனால் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று வெறும் 48 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை டபுள் ஆகியுள்ளது. நேற்று வரை 6095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இன்று கூடுதலாக 1172 பேருக்கு செய்யப்பட்ட சோதனையில் 96 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 763 பேர் ஒரே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.