இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 781 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 621ஆக உள்ளது. 

மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக டெல்லி கொரோனா பாதிப்பில் மூன்றாமிடத்தில் உள்ளது. இன்று டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 523ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டிருந்தாலும், கோவையில் இன்று ஒரே நாளில் 10 மாத குழந்தை உட்பட 5 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பது, நம்பிக்கையளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கமளிப்பதுடன், கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றால் கொரோனாவிலிருந்து காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கையூட்டிவருகிறார்.

இன்று தமிழ்நாட்டில் கூடுதலாக 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்த இடத்தில் 59 பேருடன் கோவை இரண்டாமிடத்தில் உள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:

சென்னை - 100

கோவை - 59

திண்டுக்கல் - 45

திருநெல்வேலி - 38

ஈரோடு - 32

திருச்சி - 30

நாமக்கல் - 28

ராணிப்பேட்டை - 25 

செங்கல்பட்டு - 24

கரூர், தேனி - 23

மதுரை - 19

விழுப்புரம் - 16

கடலூர் - 13

சேலம், திருவள்ளூர், திருவாரூர் - 12

நாகை, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பத்தூர் - 11

திருவண்ணாமலை - 9

தஞ்சாவூர் - 8

திருப்பூர் - 7

கன்னியாகுமரி, காஞ்சிபுரம் - 6

சிவகங்கை, வேலூர் - 5

நீலகிரி - 4

கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் - 2

அரியலூர், பெரம்பலூர் - 1.