கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690ஆக இருந்தது. 

இந்நிலையில், இன்று மேலும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1078ஆக உள்ள நிலையில், அதற்கு  அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 

கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துவரும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்றும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, வீட்டு கண்காணிப்பில் 60,739 பேரும் அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதுவரை 6,095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 4 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 69 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 48ஆக குறைந்துள்ளது ஆறுதலளிக்கும் நிகழ்வு. 

344 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 15 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் 50 லட்சத்துக்கும் அதிகமானோரை கண்காணித்துள்ளோம்.

இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேரும் ஒரேமாதிரியான(டெல்லி)  பயணபின்னணி கொண்டவர்கள் என்று தெரிவித்த பீலா ராஜேஷ், இதுவரை தமிழ்நாட்டில் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு இன்னும் கொரோனா பாதிப்பில் 2ம் கட்டத்தில் தான் இருப்பதாகவும் மூன்றாவது கட்டத்திற்கு போகாமல் இருக்க, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 29 பேர் குணமடைந்திருக்கின்றனர். போதுமான முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளதையும் உறுதி செய்துள்ளார் பீலா ராஜேஷ்.