இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தினம் தினம் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவருகிறது. 

மகாராஷ்டிராவில் 781 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நேற்று வரை 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும்   பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை முழுவீச்சில் மேற்கொண்டு வரும் நிலையில், பணி நெருக்கடிக்கு இடையில், தினமும் செய்தியாளர்களை சந்தித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளையும், அரசு சார்பில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்துவருகிறார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், இன்றைக்கு மட்டும்  50  பேருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தார். அதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு  621ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என்பதை பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தினார். ஏற்கனவே தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு 5 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 57 வயது பெண் கொரோனாவால் உயிரிழந்ததாக பீலா ராஜேஷ் தெரிவித்தார். எனவே தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. 

வீட்டு கண்காணிப்பில் 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைத்திருக்கப்பட்டிருப்பதாகவும் அரசு கண்காணிப்பில் 205 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 19 ஆயிரத்துக்கு 60 பேர் என்று தெரிவித்தார். மேலும் 32 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.