இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இன்று அது இரு மடங்காக உயர்ந்து 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இன்று சென்னையில் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் 67 பேருக்கு இதுவரையில் கொரோனா பாதிப்பு இருந்தபோதும் ஒருவர் மட்டுமே பலியாகி இருப்பதாக தெரிவித்தார். கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களில் 121 பேரின் ஆய்வு முடிவுகள் வர வேண்டி இருப்பதாகவும் எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடியாது, அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இதுவரையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக கூறிய முதல்வர் பழனிசாமி பிற மாநிலங்களை விட தமிழக மக்கள் நன்றாகவே ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போதைய நிலவரப்படி இன்று புதியதாக ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கும் சென்னையில் நான்கு பேருக்கும் மதுரையில் இருவருக்கும் திருவாரூரில் ஒரு நபருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.