தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக அதிவேகமாக உயர்ந்து கொண்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. ஏப்ரல் 13 வரை தினம் தினம் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருந்த நிலையில், நேற்றும் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

நேற்று வெறும் 31 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1173லிருந்து 1204ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்றைக்கு 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இன்று ஒரே நாளில் 2739 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 38 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து 13 நாட்களுக்கு கொரோனா டெஸ்ட் குறைவானோருக்கு செய்யப்பட்டது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2 தினங்களாக அதிகமானோருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது நல்ல சமிக்ஞை. 

இதுவரை தமிழ்நாட்டில் 17,835 நபர்களுக்கு மொத்தமாக 21,994 டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ள சுமார் 18 ஆயிரம் பேரில் 1242 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருக்கிறது.

இன்று ஒரே நாளில் ஈரோட்டில் டிஸ்சார்ஜ் ஆன 13 பேர் உட்பட மொத்தம் 37 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.