தமிழகத்தில் கொரோனாவை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுடன் கை கோர்த்து, மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் பல்வேறு தடுப்பு முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா அதன் கொடூர முகத்தை தமிழகத்தில் மெல்ல மெல்ல காட்ட துவங்கி விட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 15 மாவட்டங்களில் உள்ள 67 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேரும், சென்னையில்  22 பேர் கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களில் சிலர் பூராமனாக குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் பூரணமாக குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுநாள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வந்தவர்களாக இருந்த நிலையில், எந்த வெளிநாட்டிற்கும், வெளிமாநிலங்களுக்கும்  செல்லாமல், உள்ளுரில் இருப்பவர்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தற்போது தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது. எந்த ஒரு வெளிநாடு மற்றும்  வெளி மாநிலம் செல்லாமல் 25 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சுகாதார துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.