தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நேற்று 477 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 384 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 93 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆகும். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 6,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் டிவி நகர் ராஜஜூ தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்தினர். முதலில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததையடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோன சோதனை செய்யப்பட்டது. இதில், மகனை தவிர பேரன், பேத்தி உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், 2 குழந்தைகள் மற்றும் அவரது தாயாரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பிரிவு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உடனடியாக அவர் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆளுநர் மாளிகையில் காவல் ஆய்வாளருக்கு பணியாற்றி, போலீசார் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 

போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனை பேருந்து ஓட்டுநருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள கார் தொழிற்சாலையில் உதவி மேலாளர் அவரது மாமியாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது மனைவி, 6 வயது மகன், 4 வயது மகள் உள்ளிட்ட 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

போரூரில் உள்ள 34 வயது நபருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஊழியர் அவர். இதனையடுத்து, அவரது மனைவி, மகள்கள், தாய், சகோதரரின் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கும் கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.