கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக தலைமைச் செயலகம் மூடப்படுகிறது.

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38, 716ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் பாதிப்பு 27,398ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் சென்னையில் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே, சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைமைச்செயலக ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்;- ஊரடங்கு காலத்தில் பணியிடங்கள் மற்றும் அலுவலகங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மேலும், மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலகங்களை சுத்தம் செய்வதற்காக மூட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சுகாதார மற்றும் கிருமி நீக்கப் பணிகளுக்காக ஜூன் 13, 14 ஆகிய இரண்டு நாட்கள் ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் மூடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.அனைத்து அலுவலகங்கள், அறைகள், அரங்கங்களின் சாவிகளையும் தலைமைச் செயலகத்தின் மெயின் கட்டிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.