சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் அதிகரித்துக்கொண்டே வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்றைய  நிலவரப்படி தமிழகத்தில் 33,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 17,527 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 286ஆக இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் நோய் பரவல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள கவலை வெளியிட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் உள்ள தளர்வுகள் போல் சென்னைக்கு தளர்வு அளிக்கப்படகூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.