மதுராந்தகத்தில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.  இதனிடையே, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றும் சுகுமார் என்ற  மருத்துவருவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவர் சுகுமார் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனாவுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.