சென்னையில் அதிர்ச்சி... ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 9 பேர் உயிரிழப்பு..?
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்த 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்த 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தாலும் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ,512 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சென்னையில் 9,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராயபுரத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி, எர்ணாவூரைச் சேர்ந்த 64 வயது முதியவர், வியாசர்பாடியைச் சேர்ந்த 44 வயது ஆண், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, ராயப்புரத்தைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி, புளியந்தோப்பைச் சேர்ந்த 50 வயது பெண் உள்பட 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது.