சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை சென்னையில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில்  நேற்று புதிதாக 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமாகி 3,591 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், கொரோனா தொற்றுக்கு இன்று அதிகபட்சமாக 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது. எவ்வித இணை நோய்களும் இல்லாமல் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில், சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் 9ம் தேதி காலை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் உடனடியாக உயிரிழந்துவிட்டார். மறுதினம் அவரது சோதனை முடிவுகள் வெளியானது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. 

அதேபோல், சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞரும் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே உயிரிழந்தார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணும் கொரோனாவால் உயிரிழந்தார்.