லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நாட்டில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவுகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்கிறோம். மாஸ்க் அணியாததால்தான் கொரோனா அதிகரிப்பதால் சென்னை மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 

லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது. ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியலாம் என தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா கண்காணிப்பு பணியில் 12,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைவலி, காய்ச்சல், நுகர்வுத் தன்மை குறித்து தன்னார்வலர்கள் பரிசோதனை செய்கின்றனர். மருத்துவமனைகள் மட்டுமின்றி 12 மண்டலங்களில் ஸ்கிரீனிங் சென்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 50 மருத்துவ முகாம்களை 8000  முகாம்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10  லட்சம் பேர் எடுத்துக்கொண்டுள்ளதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்க வேண்டாம். இன்னும் 15 லட்சம் கொரோனா தடுப்பூசி உள்ளதால் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.