கொரோனா நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியும் முகக்கவசம் அணியாமல் இருந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்றைய பேட்டியில் அணிந்து வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

நாடு முழுவதும்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு நேற்றுடன் முடியும் நிலையில், மே மாதம் 3ம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அச்சம் தரும் வகையில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1204 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 12ஆகவும் உள்ளது.


இந்நிலையில், கொரோனா நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். தமிழக அரசும் வலியுத்தியிருந்தது. அதேநேரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து கொரோனா குறித்து நிலவரங்கள் தொடர்பாக தகவல் தெரிவித்து வருகிறார்.

முகக்கவசம் முதல்வர் கட்டாயம் என்று கூறியும் அவர் அலட்சியமாக இருந்து வருவதாக சர்ச்சை எழுந்தது. செய்தியாளர்கள் இது தொடர்பாக கேட்ட போதும் பெரிதாக கொடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று நாடு முழுவதும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார். அதன்பின்னர், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் முகக்கவசம் அணிந்து வந்தார். முதல்வர் எடப்பாடி சொல்லியும் முகக்கவசம் அணியாதவர் பிரதமர் மோடி சொன்ன பிறகு அணிந்து வந்திருப்பதாக  செய்திகள் உலா வருகின்றது.