நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு தந்த மன உளைச்சலாலும் பயத்தாலும் 4 நாட்களுக்கு முன்பு அரியலூரில் விக்னேஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல நீட் தேர்வு அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்காஸ்ரீ என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திலும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாந்துள்ளது. தருமபுரியில் இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவில் வசிப்பவர் மணிவண்ணன். இவருடைய மகன் ஆதித்யா(20). இவர் நீர் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்றுவந்தார். இன்று நடைபெற உள்ள நீர் தேர்வில் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு எழுதுவதாக இருந்தது. 
இந்நிலையில் நேற்று இவருடைய பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்றனர். மாலையில் வீடு திரும்பியபோது ஆதித்யா துாக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நீட் தேர்வு அச்சத்தால் ஆதித்யா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவர் மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.