வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் வெங்காய விலைகட்டுப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் . வெங்காய விலை அதிகரித்து உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில்  விலை நிலைப்படுத்தும் நிதியம் மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயம் தமிழகத்தில் பண்ணை பசுமை மையத்தில் விற்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

எதிர்பார்த்த அளவுக்கு வெங்காய வரத்து இல்லாத காரணமாக வெங்காய விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் மத்திய அரசானது நபார்டு மூலமாக எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் ,  வருகின்ற 10ந் தேதி 500 மெட்ரிக் டன் வெங்காயம் தமிழகத்திற்கு தர உள்ளதாகவும், மத்திய அரசு ஏற்பாட்டில் கிடைக்க உள்ளதாக  அமைச்சர் தெரிவித்தார். மேலும் வெங்காயத்தை பதுக்கி கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உணவுத்துறை மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

எனவே தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக விரைவில் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது தமிழகத்தில் சிறு வெங்காயம் அறுவடை செய்யும் காலம் என்பதால் விலை கட்டுப்பாட்டில் வருவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.