காதலன் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் மீளமுடியாமல் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியை அடுத்த மேடவாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி(19). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி. மேடவாக்கத்தில் உள்ள அக்கா வீட்டில் தங்கி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சொந்த ஊரில் உறவுக்கார வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் விபத்தில் படுகாயமடைந்துள்ளது. சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குக்கு சொந்த ஊருக்கு சென்ற சரஸ்வதி நேற்று மேடவாக்கத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு திரும்பி வந்தார். 

இந்நிலையில், காதலன் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் மீளமுடியாமல் மனமுடைந்து காணப்பட்டார். இதனையடுத்து, இன்று அதிகாலை எல்லோரும் ஆழ்ந்து தூக்கிக்கொண்டிருந்த போது வீட்டின் அறையில் கதவை தாழ்ப்பால் போட்டுக்கொண்டு தூக்கில் தொங்கினார். 

இதை நேரில் கண்ட அவரது அக்கா உடனே இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் காதலியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.