இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 105 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும் ஏப்ரல் 20ம் தேதி முதல் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அங்கு மக்கள் சில பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அவற்றை மாநில அரசுகள் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி இன்று முதல் இந்தியாவில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் அவை நடைமுறைக்கு வந்துள்ளன. இதனிடையே இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4ம் இடம் வகிக்கும் நிலையில் ஊரடங்கில் தமிழகத்தில் தளர்வு இருக்குமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்க உள்ளார்.


தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் 12 வல்லுநர் குழுக்கள் ஆலோசனை நடத்தி ஊரடங்கு தளர்வு குறித்தும் எந்தெந்த இடங்களில் எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்த பிறகு  குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதல்வர் இறுதி முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதிய உத்தரவு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.